Saturday 7 January 2017

தேசிய வங்கிகளை மிஞ்சிய தபால்துறை!: அதிக கிளைகள் கொண்ட வங்கியாக முதலிடம்


கோவை:இந்தியாவிலுள்ள தேசிய வங்கிகளைக் காட்டிலும் அதிக கிளைகள் மற்றும் அதிக சேமிப்பு கணக்காளர்களை கொண்ட வங்கியாக தபால்துறை உருவெடுத்துள்ளது.

பொருளாதார தேவைகளை உயர்த்த பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், அதிக முக்கியத்துவம் தருவது சேமிப்புக்கு மட்டுமே. சேமிப்புகளை மையப்படுத்தி பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள், வங்கிகளில் செயல்படுத்தப்பட்டாலும், கிராமப்புறங்களை பொறுத்தவரை இன்றும் சேமிப்பில் சிறப்பிடம் பெறுவது, தபால் நிலையங்கள் மட்டுமே.

கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்கலாம்; எளிதில் போய் சேமிக்கலாம்; எல்லா ஊர்களிலும் சேமிக்கலாம் உள்ளிட்டவை, தபால் நிலையத்திற்கே உரிய சிறப்பம்சங்கள்.

தபால்துறையின் நம்பகத்தன்மை ஒருபுறம் இருந்தாலும், வங்கிகளின் வருகை, அனைவரது கவனத்தையும் திருப்பியது என்றே சொல்லலாம். ஏ.டி.எம்., மூலம் எளிய பணபரிமாற்றம், ஆன்லைன் மணி டிரான்ஸ்பர், பில் பேமண்ட் உள்ளிட்ட வசதிகளும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டன.

இதை கருத்தில் கொண்டு, வங்கிகளுக்கு இணையான சேவையை வழங்க, தற்போது வங்கி சேவையிலும் அடியெடுத்து வைத்துள்ளது தபால்துறை. அனைத்து தபால் அலுவலகங்களையும் 'கோர் பேங்கிங்' முறையில் இணைப்பதன் மூலம், நாட்டின் எந்த கிளைகளிலிருந்தும் பணத்தை, ஏ.டி.எம்., மையம் மூலம் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 22,395 தபால் நிலையங்கள்'கோர் பேங்கிங்' வசதியுடன் செயல்படுகின்றன. நாடு முழுவதும், 913 தபால் நிலையங்களில் ஏ.டி.எம்., மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.
இன்றைய சூழலில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைக் காட்டிலும், அதிக கிளைகளுடன் இணைக்கப்பட்டவங்கியாக தபால்துறை திகழ்கிறது.


ஏழைகளுக்கான சேமிப்பு திட்டம்

முன்னாள் தபால்துறை அதிகாரி ஹரிஹரன் கூறியதாவது:பல்வேறு சேமிப்பு திட்டங்கள், தேசிய வங்கிகளுக்கு இணையாக, தற்போது தபால்துறையிலும் வழங்கப்படுகின்றன என்பதே உண்மை. ஆயினும், சேவை கட்டணத்தை ஒப்பிடுகையில், தேசிய வங்கிகளைக்காட்டிலும், தபால் வங்கியில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

ஏ.டி.எம்., கார்டு பயன்பாடு, பண பரிமாற்றம், எஸ்.எம்.எஸ்., சேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குறிப்பிட்ட கட்டணம், வங்கிகளில் வசூலிக்கப்படுகின்றன. தபால் சேமிப்பு கணக்கில் மேற்கண்ட எந்த கட்டணமும் இல்லை. அதேபோல், குறிப்பிட்ட வங்கியின் ஏ.டி.எம்., மையத்தில், குறிப்பிட்ட முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். அதுவே, தபால்வங்கியில் எங்கு வேண்டுமானாலும் பரிமாற்றம் செய்யலாம்.

இதுபோன்ற, பல்வேறு காரணங்களால், தேசிய வங்கிகளைக் காட்டிலும், பொதுமக்களுக்கு குறிப்பாக, ஏழைகளுக்கு மிக எளிய சேவையாக தபால் சேமிப்பு வங்கி இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

தனியார் வங்கிகளைக் காட்டிலும், பலமடங்கு கிளைகளுடன் தபால் வங்கி உருவெடுக்கும் காலம் வெகுதுாரத்தில் இல்லை. இதை கவனத்தில் கொண்டு, தபால் வங்கி சேவையை அனைவரும் தேர்வு செய்வதே நல்லதும்கூட.இவ்வாறு, அவர் கூறினார்.

0 comments:

Post a Comment