Sunday 27 December 2015

மத்திய அரசின் சி, டி பிரிவு பணிக்கு நேர்முகத் தேர்வு ஜனவரி 1 முதல் ரத்தாகிறது


மத்திய அரசின் சி, டி ஆகிய கீழ்நிலைப் பிரிவு பணிகளுக்கு வரும் ஜனவரி

   1-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோல சான்றொப்ப நடைமுறையும் கைவிடப்படுகிறது.

இதுகுறித்து மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று கூறியதாவது

பிரதமர் நரேந்திர மோடிமன் கி பாத்வானொலி நிகழ்ச்சியில் ஏற்கெனவே அறிவித்தபடி, அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகள் முக்கிய ஆவண நகல்களுக்கு சான்றொப்பம் அளிக்கும் நடைமுறை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ரத்தாகிறது. இத்தகைய நகல்களில் விண்ணப்பதாரரே சுய ஒப்பம் அளித்தால் போதும். குடிமக்கள் மீதான நம்பிக்கை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

இதுபோல, அரசு ஊழியர்கள் திடீர் மரணத்தின்போது கருணை அடிப்படையில் வேலை கோரும் அவரது குடும்பத்தினர், அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரி மூலம் பிரமாண பத்திரம் (அபிடவிட்) தாக்கல் செய்யும் நடைமுறை சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதற்கு மாறாக சுய அறிவிப்பு (செல்ப் டிக்ளரேஷன்) படிவம் கொடுத்தாலே போதும். இந்த நடைமுறையை கடைபிடிக்குமாறு மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் சி, டி ஆகிய கீழ்நிலைப் பிரிவு பணிக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

Source:The Hindu

0 comments:

Post a Comment