புதுடெல்லி: தேர்வு செய்யப்பட்ட தபால் நிலையங்களில், பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் சேவை அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் பாஸ்போர்ட் கிடைக்க ஏதுவாக மாநிலங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்களைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. இத்திட்டத்தை, பாஸ்போர்ட் வழங்கும் வெளியுறவுத் துறையும், தபால் துறையும் இணைந்து செயல்படுத்துகிறது.
முதற்கட்டமாக இத்திட்டத்துக்காக, தமிழகம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில தபால் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சேலம், வேலூர் ஆகிய தலைமை தபால் நிலையங்கள் தேர்வாகி உள்ளன.
மார்ச் 31ம் தேதிக்கு முன்பாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி கொண்டு வரப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியிருந்த நிலையில், தேர்வு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் அடுத்த மாதம் முதல் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி தொடங்கும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதற்கான அனைத்து பணிகளும் விரைவாக நடப்பதாக கூறியுள்ளது.நாடு முழுவதும் 89 பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்படுகின்றன. இங்கு கடந்தாண்டில் 1.15 கோடி பாஸ்போர்ட் விநியோகம் மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Source:http://www.dinakaran.com/
0 comments:
Post a Comment