Wednesday 14 September 2016

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பற்றிய நிலை அறிய புதிய இணையதளம்: அருண் ஜேட்லி தொடங்கி வைப்பு

 
தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு புதிய அலுவலக வளாகமான மஹாலேகா நியாந்த்ரக் பவனை திறந்து வைத்து பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. | படம்: பிடிஐ. 
 
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தங்கள் ஓய்வூதியம் பற்றிய நிலையை அறிந்து கொள்ள புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் எஸ்எம்எஸ் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக, புதிய இணையதளத்தை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார். ‘www.cpao.in’ என்ற முகவரியில் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் பற்றிய நிலையை அறிந்து கொள்ளலாம். அத்துடன் குறைகள் தொடர்பான புகார்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், எஸ்எம்எஸ் மூலம் ஓய்வூதியம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

மொபைல் போன் மூலமாகவே புகார்களை அனுப்பலாம். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் பதில் தகவலும் அனுப்பப்படும். இதன்மூலம் 11.61 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் பலன் அடைவார்கள் என்று அருண் ஜேட்லி கூறினார்.

புதிய இணையதளம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளால் தேவையில்லாமல் ஓய்வூதியதாரர்கள் அலைக்கழிக்கப்படுவது, மனவேதனை அடைவது தடுக்கப்படும். இனிமேல் ஓய்வூதியதாரர்கள் எந்த துன்பமும் படக்கூடாது. ஏனெனில், அவர்கள் நமது நாட்டின் மூத்த குடிமக்கள். அவர்களுக்கு ஓய்வூதியம் மிக முக்கியம். அதை சார்ந்துதான் அவர்கள் இருக்கின்றனர் என்று ஜேட்லி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கணக்கு தணிக்கைத் துறை தலைவர் எம்.ஜே.ஜோசப் பேசும்போது, ‘‘இந்த புதிய இணையதளம் ஓய்வூதியதாரர்களின் குறைகளை தீர்த்து வைப்பதில் வெளிப்படை தன்மை மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கும்’’ என்றார்.

0 comments:

Post a Comment