Friday, 6 January 2017

சென்னையில் அஞ்சல் தலை கண்காட்சி: 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுகிறது


தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சார்பில் மாநில அளவிலான அஞ்சல் தலை கண்காட்சி சென்னையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியுள்ளது.
"டானாபெக்ஸ் - 2017' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியானது 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் 2017-ஆம் ஆண்டு நடைபெறுகிறது.
ஜனவரி 8-ஆம் தேதி வரை ஷெனாய் நகர் அம்மா அரங்கத்தில் இந்தக் கண்காட்சி நடைபெறும்.

கண்காட்சியில் அரும்பொருள்கள், மலர்கள், வடிவமைப்புகள், கலை- இசை, சுதந்திரப் போராட்டவீரர்கள், விலங்குகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அஞ்சல்தலைகள் 450 காட்சிச் சட்டங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை சேகரிப்பு தொடர்பான பல்வேறு போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இதுதவிர புகழ்பெற்றவர்களின் கடிதங்கள், இந்திய அஞ்சல் துறை குறித்த விவரங்களை அளிக்கும் வகையிலான அஞ்சல் தலை சேகரிப்பு உள்ளிட்டவை தொடர்பான அரங்குகள் உள்ளன.

மேலும், அஞ்சல் தலைகள் மற்றும் தபால் துறை சார்ந்த அரியப் பொருள்களை வாங்குவதற்கென்று 15 விற்பனையாளர் அரங்குகளும் உள்ளன.

கண்காட்சியின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் பாரம்பரிய காஞ்சிபுரம், ஆரணி, திருப்புவனம் பட்டுச் சேலைகள், இந்தியாவின் நறுமணப்பொருள்(ஸ்பைஸ்) மஞ்சள், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், திருவாரூர் தேர் உள்ளிட்டவை அடங்கிய சிறப்பு அஞ்சல் உறையும் வெளியிடப்பட்டன. தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங் பேசியது:

தமிழகத்தின் பட்டுச் சேலைகள் குறித்த சிறப்பு அஞ்சல் உறை வெளியிடபட்டது சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். இதன் மூலம் நெசவாளர்கள் பிரபலமடைந்து, அவர்கள் தொழில் சிறக்கும். அஞ்சல் துறைக்கும் இந்தச் சிறப்பு உறைகள் விற்பனையின் மூலம் வருவாய் கிடைக்கும்.

இந்தியாவிலேயே கைத்தறி நெசவாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது. 3 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் தமிழகத்தில் உள்ளனர் என்றார்.
அஞ்சல் துறையின் இயக்குநர் ஜெனரல் டி.மூர்த்தி பேசுகையில், கடந்த முறை கோவையில் நடைபெற்ற அஞ்சல் தலை கண்காட்சியின் மூலம் ரூ.40 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இந்த முறை ரூ.150 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

0 comments:

Post a Comment